Menu
- Home
- தமிழ்ப்பேராயம்
தமிழ்ப்பேராயம்
Tamil Perayam
‘‘தமிழ்ப்பேராயம்” தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு பணிப்புலம் ஆகும். தனக்கெனத் தனி அடையாள முத்திரை கொண்டதாய் இவ்வமைப்பு விளங்குகிறது.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திரு. இராமசாமி நினைவு(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், கலையியல், மானுடவியல் வேளாண்மையியல், சட்டவியல் போன்ற பல்வேறு துறைகளில் கல்வியை வழங்கிச் சிறப்பான கல்விச்சேவையில் ஈடுபட்டுவருகிறது. வெள்ளிவிழா கண்ட நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிற நிலையில் தமிழ்மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உணர்த்த தமிழ்ப்பேராயம் என்னும் அமைப்பை 03 பிப்ரவரி 2011-இல் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் தா.இரா. பாரிவேந்தர் உருவாக்கினார்.
‘‘தமிழ்ப்பேராயம்” தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு பணிப்புலம் ஆகும். தனக்கெனத் தனி அடையாள முத்திரை கொண்டதாய் இவ்வமைப்பு விளங்குகிறது.
இந்திய நடுவண் அரசின் சாகித்திய அகாதெமி இந்திய மொழிகளுக்கு எத்தகைய பணிகளைச் செய்கிறதோ அதேபோன்று தமிழ்மொழிக்கு ஆக்கப் பணிகளைச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது தமிழ்ப்பேராயம் (Thamizh Academy). இந்தத் தமிழ்ப்பேராயத்தின் பல்வேறு பணித்திட்டங்களைத் தமிழ்ப்பேராய மையப் பணிக்குழு (Central Executive Cell – Tamil Perayam-CEC-TP) செயல்படுத்துகிறது.
நோக்கம்: (VISION)
துறைதோறும் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்தல், அரிய நூல்களையும் புதிய ஆய்வு நூல்களையும் வெளியிடல், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தல், தமிழ்ப் பண்பாடு மற்றும் சமயம் தொடர்பான பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகளை நடத்துதல், உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை ஆற்றுதல்.
செயல்பாடு : (MISSION)
தமிழில் வழிபாடு நடத்துவதற்கான பட்டய வகுப்பை நடத்தி வருதல், வள்ளலார் மற்றும் திருமூலர் தொடர்பான பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகளை நடத்துதல், செவ்விலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், மூத்த தமிழறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களை வெளியிடுதல், தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தி அக்கட்டுரைத் தொகுப்புகளை நூலாக வெளியிடல், ‘‘செவ்வி’’ என்ற காலாண்டு ஆய்விதழை வெளியிடல், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி மாணவர்களின் ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பளித்தல். மாணவர் மன்றம் மூலமாக ‘‘வேந்தர் நெறி’’ என்ற காலாண்டு இதழை நடத்துதல்.
முனைவர் கரு. நாகராசன்
தலைவர்
தமிழ்ப்பேராயத்தின் பக்கத்திற்கு வரவேற்கிறோம்
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காகச் சாகித்ய அகாதமி என்ற நிறுவனத்தை மத்திய அரசு நடத்துவது போல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பல்கலைக்கழக வேந்தர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் 2011 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ப்பேராயம்.
தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு, பதிப்புக் குழு மற்றும் மையப் பணிக் குழு ஆகிய கட்டமைப்புடன் செயல்படும் தமிழ்ப்பேராயம், தமிழ்க் கல்வித் துறை, தமிழ்ச் சமயக் கல்வித் துறை, கணினித் தமிழ்க் கல்வித் துறை, நூல் பதிப்புத் துறை ஆகியவற்றுடன் ஆண்டுதோறும் சுமார் 20 இலட்சம் பெறுமான விருதுகளையும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கலைமாமணி விருது உட்பட நான்கு அரசு விருதுகளையும், இரண்டு நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினையும் பெற்றவர். 75 நூல்களின் ஆசிரியரான இவர், தமிழக அரசின் உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் உட்பட பல உயர் பொறுப்புகளில் இருந்தவர். பேராயத்தில் பணியாற்றும் பிற துணைப் பேராசிரியர்களும், கவிதை, ஆய்வு எனப் பல நூல்களைப் படைத்தவர்கள். அத்தகைய சிறப்புமிக்க தமிழ்ப்பேராயத்திற்குத் தங்களை வரவேற்பதில் பெருமிதம் அடைகிறோம்.
முனைவர் பா.ஜெய்கணேஷ்
செயலர், தமிழ்ப்பேராயம்
தமிழ்ப்பேராயம் என்னும் மாபெரும் அமைப்பானது ஐந்தாம் தமிழ்ச் சங்கமாகப் பல்வேறு பணிகளை ஆற்றிவருகின்றது. மாண்பமை தா. இரா. பாரிவேந்தர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது தமிழின் பெருமையை, சிறப்பை உலக அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் கரு. நாகராசன் அவர்களின் வழிகாட்டுதலில் மிகச்சிறந்த குழு தமிழ்ப்பேராயப் பணிகளை ஆற்றிவருகின்றது. தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், சிறந்த நூல்களை வெளியிடுதல், சான்றிதழ்ப் பட்டயப் படிப்புகளை நடத்துதல், கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஒருங்கிணைத்தல் முதலான பல்வேறு அரிய பணிகளைத் தமிழ்ப்பேராயம் முன்னெடுத்து வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழ்ப்பேராயத்தின் அங்கமாக பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றமும் பல்வேறு பணிகளை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தமிழ்ப்பேராயத்தின் பக்கத்திற்குத் தங்களைச் செயலர் என்ற முறையில் வரவேற்பதில் மகிழ்கிறேன்.
சமீபத்திய தமிழ்ப்பேராயம் நிகழ்வுகள்
தமிழ்ப்பேராய விருதுகள்
தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசுசார் தமிழமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி தமிழ்ப்பேராயம் இயங்குகிறது. இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாகித்திய அகாடெமி வழங்கும் விருதுகளைவிட அதிக எண்ணிக்கையிலான விருதுகளைக் கொண்டுள்ளது சாகித்திய அகாடெமி வழங்காத, தமிழ்ப்பேரறிஞருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் தமிழ்ப் பேராயம் வழங்கிவருகின்றது.
- இதுவரையில் 2 கோடியே 20 இலட்சம் அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது.
- இதுவரையில் 89 படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர்.
தமிழ்ப்பேராயத்தின் பிற பணிகள்
தமிழில் வழிபாடு நிகழ்த்துவதற்குத் தகுதிவாய்ந்த அர்ச்சகர்களை உருவாக்கும் நோக்கத்தோடு தமிழ் அருட்சுனைஞர் என்கின்ற கல்வி 2011 ஆம் ஆண்டு முதல் தெய்வத்தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் 1200க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சியை முடித்து ஆங்காங்கு தமிழில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அரிய பல நூல்களை அச்சிடும் பணியையும் தமிழ்ப்பேராயம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. புலவர் இளங்குமரனார், அறிஞர் தமிழண்ணல் போன்றோர் எழுதிய நூல்களும், சித்த மருத்துவப் பேரறிஞர் சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய நூல்களும் தமிழ்ப்பேராயத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் பல, உரிய அறிஞர்களின் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தை மையமாக வைத்து 7 குறுநூல்கள் இதுவரையில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் ‘‘பொங்கல் விழா’’ பல்கலைக் கழகத்திலுள்ள அனைவரும் பங்கேற்கும் விதத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் உலகத் தாய்மொழி தினம், உலகக் கவிதை தினம், அன்னையர் தினம், மகளிர் தினம் ஆகியவற்றுடன் தேசத் தலைவர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பிறந்த நாட்களும் தமிழ்ப்பேராயத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.
வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ‘‘சிந்தனை அரங்கம்’’ நிகழ்ச்சி இணைய வழியில் நடத்தப்பெற்று வருகிறது. இதுவரை 70 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்து அறிஞர்கள் மட்டுமின்றி உலகின் பல நாட்டு அறிஞர்களும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை வளர்த்தெடுக்கும் வகையில் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் என்ற அமைப்பினை உருவாக்கி, மாணவப் படைப்பாளர்களை உருவாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த மன்றத்தில் ஐந்தாயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக இருப்பது குறிக்கத்தக்கது. வேந்தர் நெறி என்ற காலாண்டு இதழும் மன்றத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. வாரம்தோறும் மாணவர்கள் பங்கேற்கும் ஆற்றல் அரங்கம் என்ற நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆய்வுப் படைப்புக்களை வெளியிடும் நோக்கில் ‘‘செவ்வி’’ என்ற காலாண்டு ஆய்விதழும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
“தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு’’ என்ற தலைப்பில் ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும் பங்கேற்றனர்.
‘‘தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு’’ என்னும் தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது. 6 ஜீயர்களும் 10 ஆசாரியர்களும் அதில் பங்கேற்று உரையாற்றினர்.
வள்ளல் பெருமானின் 200 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு “வள்ளலாரின் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பெற்று அக்கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.
Reach US
தமிழ்ப்பேராயம்
UB 518, ஐந்தாம் தளம்,
நிர்வாகக் கட்டடம்(University Building)
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
காட்டாங்குளத்தூர் – 603203
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.



